சென்னை:திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
"விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10 ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14 ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளராக பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தியாகம்:விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உங்கள் (தொண்டர்கள்) நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கியது.
அப்போது பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது.
பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.
இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13 ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்.
துரோகம்:தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7 ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
அதன்பின் 5 ஆண்டுகள் ஆகிவிட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.