தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டன"- பாஜக ராம சீனிவாசன் காட்டம்! - RAAMA SREENIVASAN ABOUT HINDI

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. தமிழகத்தில் மட்டும் திமுகவுடன் சேர்ந்து மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமா சீனிவாசன்
பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமா சீனிவாசன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 8:25 PM IST

திருச்சி:மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் 2025 -26 மத்திய பட்ஜெட் சாதனை விளக்கம் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது பேசிய ராம சீனிவாசன், “புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியைதான் மத்திய அரசு படிக்கச் சொல்கிறது. ஆனால், திமுக இந்தியைத் திணிப்பதாக பொய்யான கருத்தைப் பரப்பி வருகிறது. திமுகவில் உள்ள பிரமுகர்கள் வீட்டுக் குழந்தைகள் இந்தியை மொழியை சிபிஎஸ்சி பள்ளியில் பயின்று வருகிறார்கள். ஆனால், தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்க்கிறது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேச்சு (ETV Bharat Tamil Nadu)

இந்த கல்விக் கொள்கை மூலம் வடமாநில மாணவர்கள் தென்மாநில மொழிகளை கற்றுக் கொள்ளலாம். தென்மாநில மாணவர்கள் வடமாநில மொழிகளை கற்றுக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பை பெறலாம். மொழி என்பது நம்மை இணைக்கும் கருவி. நம்மை பிணைக்கும் கருவி. இந்த பிணைக்கும் கருவியைப் பிளக்கும் கருவியாக மாற்ற திமுக முயற்சிக்கிறது, அது நடக்காது.

திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி நாடகம் போடுகின்றன. கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது. கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் இக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏற்றுக் கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. அவர்களது அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்துவிட்டார்கள். அவர்கள் தற்போது அறிவாலய அடிமைகளாகிவிட்டனர். இதுகுறித்து கூட்டணிக் கட்சிகள் கண்டிப்பாகத் தமிழக மக்களிடம் விளக்க வேண்டும்.

இதையும் படிங்க:நாதக-வில் இருந்து காளியம்மாள் விலகல்! "இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்" என உருக்கமான கடிதம்!

தமிழ் மிகவும் வலிமையான மொழி. அது அழிந்துவிடும் என திமுக பொய்யான கருத்தைப் பரப்புகிறது. உண்மையில் தமிழ் அழியாது. ஆனால். தமிழக மக்கள் இந்தி கற்றுக் கொண்டால் திமுக அழிந்துவிடும் என அக்கட்சியினர் பயப்படுகின்றனர். இந்தி தெரிந்துவிட்டால் நம் பிரதமர் மோடி பேசுவது மக்களுக்குப் புரிந்துவிடும் என அஞ்சுகின்றனர். பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கொள்கை வைத்துள்ளது திமுக. தமிழக மக்களை முட்டாளாக வளர்க்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆட்சியில் இருக்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றனர்." என்று ராம சீனிவாசன் காட்டமாக பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details