புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, சங்கம்விடுதி பஞ்சாயத்துக்குட்பட்ட குருவாண்டான் தெருவில் இரண்டு சமூகத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்ததாகப் புகார் வந்தது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள நீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த நிலையில் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூக மக்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் "இரண்டு சமூகத்து மக்களும் ஊரில் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். எங்களது ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக ஒரு சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
நீர் மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவு வந்தவுடன் சாணம் கலந்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு இளையராஜா என்பவர் மீது சந்தேகம் உள்ளது. அவரை காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் தான் எங்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகின்றனர்.
என்ன நடந்தது, என்று தெரியாமல் இந்த விஷயத்தை பெரியதாக்குகின்றனர். இரண்டு சமூகத்து மக்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். அங்குள்ள கோயிலில் இரு தரப்பினரும் வழிபடுகிறோம். ஆனால் வேண்டுமென்று ஒரு சிலர் எங்களுக்குப் பிரிவினையை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.