தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும்"- அமைச்சர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜாக்டோ -ஜியோ திட்டவட்டம்! - JACTO JEO PROTEST

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (பிப்.25) திட்டமிட்டப்படி போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ -ஜியோ அமைப்பினர்
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2025, 11:06 PM IST

சென்னை:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (பிப்.25) திட்டமிட்டப்படி போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என திமுக தேர்தல் வாக்குறுதியை அளித்தது. இருந்தபோதும் அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி நாளை (பிப்.25) மாநில அளவிலான போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் தலைமையிலான குழு அண்மையில் அமைக்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்ககளுடன், இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் என்னென் என்பது குறித்தும், அதை நிறைவேற்றுவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பிறகு முதல்வரிடம் கோரிக்கைகள் எடுத்துக்கூறிய பிறகு மீண்டும் ஆலோசனை நடைப்பெறும் என அறிவித்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு, ஜாக்டோ -ஜியோ அமைப்பினருடன் இன்றிரவு மீண்டும் ஆலோசனை நடத்தியது.

நாளை தினம் ஜாக்டோ - ஜியோ போராட்டம் அறிவித்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக அரசுக்கு 4 வார காலம் அவகாசம் வேண்டும் கேட்டு கொண்டனர். அதுவரை போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள் குழு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் எங்களால் கால அவகாசம் இனிமேல் தரமுடியாது என்பதால் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைப்பெறும். சுமார் 11 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் வகையில்
தற்செயல் விடுப்பாகவும், மாவட்ட தலைநகரங்களில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டமாகவும் எங்களின் போராட்டம் நடைப்பெறும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடைப்பெறும்.

மேலும் போராட்டத்தை தொடர்ந்து செல்வதற்கு முன்பாக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஆர்பாட்டத்திற்கு பிறகு மீண்டும் கலந்து பேசி அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபடுகின்றோம். எங்கள் கோரிக்கைகள் வரும் பட்ஜெட்டில் நிறைவேறும் என நாங்கள் நம்புகிறோம்.

நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு எதுவும் வரவில்லை என்பதால் அதுகுறித்து எதையும் சொல்ல முடியாது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போது அழைத்தாலும் அதனை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்." என்று சீனிவாசன் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details