சென்னை:ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து 'அனைத்து மாணவர் கூட்டமைப்பு' சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் திமுக மாணவர் அணியினரும், மாணவர் கூட்டமைப்பினரும் முற்றுகையிடும் போராட்டத்தை இன்று (பிப்ரவரி 25) நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டியும் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பவள விழா வளைவில் இருந்து, பேரணியாக பஜார் சாலை வழியாக தபால் நிலையத்தை சென்றடைந்த போராட்டகாரர்கள், அங்கு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பேசிய தென் சென்னை தி.மு.க மாணவர் அணி தலைவர் அருண், “தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக தர வேண்டும். இந்தி திணிப்பை ஏற்கனவே எதிர்த்தது போல, நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கை தான் அவசியம்,” என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய புரட்சிகர மாணவர் அமைப்பின் மணிகண்டன், “மோடி அரசு தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதனை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெறும். இந்தப் போராட்டம் முதல் கட்டம் தான், அடுத்த கட்டமாக தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்,” எனத் தெரிவித்தார்.