சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, ரோடு ஷோ மூலம் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக, கோயம்புத்தூரில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று சென்னை தியாகராய நகர், பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணி பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களைத் தூவி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் வாகனத்தில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்றனர்.
ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே, தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் இன்று மூடப்பட்டு, பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் பனகல் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருந்தது. பனகல் சாலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசாரால் கண்காணிக்கப்பட்டது.