தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"2024 தேர்தலுக்குப் பிறகு திமுக முற்றிலுமாக ஒழிக்கப்படும்" - பிரதமர் மோடி - Modi in Nellai

Prime Minister Modi: வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திமுக முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது என நெல்லையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Prime Minister Modi
பிரதமர் மோடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 4:10 PM IST

திருநெல்வேலி: பாஜகவின் 'என் மண் என் மக்கள்' பயணத்தின் நிறைவு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வருகை தந்தார். அந்த வகையில், இன்று தூத்துக்குடி குலசேகரன்பட்டினத்தில் நடந்த ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை பெல் மைதானத்தில், பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அப்போது கூட்டத்தில் பேசிய மோடி, "நெல்லையப்பரையும், காந்திமதி அம்மையையும் வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். திருநெல்வேலி மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா மாதிரி இளகிய மனம் கொண்டவர்கள். நேற்று திருப்பூர் மற்றும் மதுரையில் இருந்தேன். எனக்கு திருநெல்வேலி வர நல்ல பாக்கியம் கிடைத்துள்ளது. வயதானவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், நடுத்தர மக்கள் என அனைவரும் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.

தமிழக மக்களின் இந்த நம்பிக்கையை பாஜக காப்பாற்றும். நமது உண்மையான சமூக நீதி, நேர்மையான அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை முழுவதுமாக பாஜக நிறைவேற்றும் என்ற உறுதியை இன்று திருநெல்வேலியில் உங்கள் முன் வைக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றி மிகத் தெளிவுடன் இருப்பார்கள்.

அதற்கு முக்கிய காரணம், அவர்கள் தொழில்நுட்ப அறிவியலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இதுதான் தமிழகத்தை பாஜகவுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது. பாஜகவின் அணுகுமுறையும், தமிழக மக்களின் எண்ணமும் ஒத்துப் போகிறது. எதிர்காலத்தை நோக்கிய பாஜகவின் சிந்தனையும், மக்களின் சிந்தனையும் ஒன்றுபடுவதால், தமிழக மக்களுக்கு பாஜகவின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபோல் இந்தியா வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தித் துறையில் வெளிநாட்டுடன் இந்தியாவும் போட்டியிட்டு முன்வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வளங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த நாடு புதிய சிந்தனையோடு செயல்படுகிறது. தமிழ்நாடு இந்த புதிய சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கப் போகிறது.

நீங்கள் வெளிநாட்டிற்குச் செல்லும்போது, அங்கு அவர்கள் உங்களை என்ன மரியாதையோடு பார்க்கிறார்கள், இந்தியர்களை அவர்கள் வியப்போடும், மரியாதையோடும் பார்க்கிறார்கள் தானே, அந்த பெருமை தமிழக மக்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ளவர்கள் இந்தியாவை இவ்வளவு பெருமையாகப் பார்க்கிறார்கள் என்பது, மத்திய அரசு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.

இந்த மாற்றம் நிலையான உறுதியான, வளர்ச்சியை நோக்கிய மாற்றம் என்பதை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள், பாஜகவைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னே வரத் தொடங்கி இருக்கிறார்கள். நான் யோசித்துப் பார்க்கிறேன், இப்போதுதான் முதல்முறையாக டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைந்துவிட்டது. நெருக்கமாக வந்துவிட்டோம். இன்றைக்கு ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என ஒவ்வொருவருக்குமான திட்டத்தின் பலன்களும் தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது.

இதுதான் பாஜக அரசு எப்படி செயல்படுகிறது என்பதற்கான ஒரு சாட்சியாக இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் கிராமப்புற வீடுகளில் இருந்த குடிநீர் குழாய் திட்டம், 21 லட்சமாக இருந்தது. ஆனால், நமது அரசு 1 கோடி வீடுகளுக்கு மேல் கிராமப்புறங்களில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்துள்ளோம். வீட்டில் தண்ணீர் இல்லாமல் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். குடிநீர் குழாய் இல்லாமல் ஏழைப் பெண்கள்பட்ட அவஸ்தையைச் சொல்ல முடியாது.

ஆனால், இந்த குழாயைக் கொடுத்தவுடன் அவர்களது வாழ்க்கை சுலபமாக இருக்கிறது. இதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் வீட்டிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகையிலிருந்தும், சமைக்கும் துன்பத்திலிருந்தும் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நமது தாய்மார்கள் சகோதரிகள் வாழ்க்கையில் மிகப்பெரிய நன்மை கிடைத்துள்ளது.

அதனால்தான் நான் செல்கின்ற பக்கம் எல்லாம் இத்தனை தாய்மார்கள், பெண்கள் திரளாக வந்து எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். நமது பாரத தேசம் 100 மடங்கு முன்னேற்றம் அடைந்தால், தமிழ்நாடும் இணையாக 100 மடங்கு முன்னேற வேண்டும், இது மோடியின் உறுதிமொழி. அதனால்தான் 10 ஆண்டுகளில் தமிழகத்திலும் மதுரையில் எய்ம்ஸ் திறக்கிறோம். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இலவச சிகிச்சை பெறுகிறார்கள்.

இப்போது தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் எங்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்காத ஓர் அரசாங்கம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும், ஒரு குறை சொல்கிறார்கள். அதை மீறி மக்களுக்கு நாங்கள் நன்மை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும், இவர்கள் ஏன் நாட்டின் வளர்ச்சியை, திட்டங்களைத் தடுக்கிறார்கள்? ஏன் மக்களின் நலனைத் தடுக்க வேண்டும் என மாநில அரசு நினைக்கிறது என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் நாட்டை கொள்ளை அடிப்பதற்காகவே வளர்ச்சியைத் தடுக்கின்றனர். ஆனால், உங்கள் மோடி அதை நடக்கவிட மாட்டார். அதை இரும்புக்கரம் கொண்டு தடுப்பார். அந்த கொள்ளை முயற்சி தடுக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கும், ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள். நான் அயோத்தியில் கோயில் திறப்பதற்கு முன்பு தனுஷ்கோடி கோயில்களுக்கு எல்லாம் சென்று, ஆசீர்வாதம் பெற்றுதான் அயோத்தி ராமரைத் திறந்தோம். மொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்தது. ஆனால், பாராளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்தார்கள். அதை அவர்களால் ஏற்க முடியவில்லை. இதன் மூலம் உங்கள் நம்பிக்கையை எதிர்க்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள். திமுக தனது குடும்ப வளர்ச்சியைத் தவிர, மாநிலத்தின் வளர்ச்சியைப் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கிறார்கள்.

ஆனால், பாஜக அப்படியில்லை. உங்களை நேசிக்கிறோம் என்பதற்காகத்தான், உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு தலித் குடிமகனை, உங்கள் பிள்ளையை நாங்கள் மத்திய அமைச்சராக்கி இருக்கிறோம். அதுவும் பொறுக்காமல் இந்தி வேற, தமிழ் வேற என்று பேசுகின்றனர். இந்தி பேசும் மத்திய மாநிலத்திலிருந்து அவருக்கு ஒரு எம்பி பதவியும் மறுபடியும் கொடுத்துள்ளோம். இதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்றால், எங்களுக்கு நாட்டு மக்கள்தான் முக்கியம்.

இது வலிமையான பாரதம். அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் விழுந்தபோது, ஒரு கீறல் கூட இல்லாமல் நாங்கள் அழைத்து வந்தோமா, இல்லையா? இலங்கையில் 5 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது, அவர்களுக்குத் தண்டனை கிடைத்ததா? நாங்கள் அவர்களை மீட்டு வரவில்லையா? அரசியலை எல்லாம் திருத்த வேண்டிய காலம், இந்த அரசுகளை மாற்ற வேண்டிய காலம். திமுக பொய் வேஷம் போடுகிறது. திமுக சூழ்ச்சி செய்கிறது. இதை நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

ஆனால், இனிமேல் திமுகவைப் பார்க்க முடியாது. இனிமேல் திமுக இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்துவிட்டார். இனிமேல் திமுகவை நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காது. காசு பணம் சம்பாதிக்க உங்கள் நம்பிக்கையை, உங்கள் மொழியை, உங்கள் இனத்தை சிறுபான்மைப்படுத்தி, கேவலப்படுத்தி அந்த நம்பிக்கையைக் கெடுக்கின்ற திமுக முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும்.

வளர்ந்த இந்தியாவுக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நேரம். வளர்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதால்தான் இந்திய அரசு பெரிய முதலீடு செய்து, தொழில்துறையை முன்னுக்கு கொண்டு வருகிறது. திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் வந்த பிறகுதான் தொழில் வளத்திலும், போக்குவரத்திலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் சூரிய மின்சக்தி திட்டம் விரைவில் நிறைவு பெற உள்ளது. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். சாகர்மாலா திட்டத்தில் உள்கட்டமைப்பு மிக வேகமாக தமிழ்நாட்டில் மேம்படுத்தப்படுகிறது. பெரிய புதிய சாலைகள் போடப்படுகிறது. தற்போது உங்கள் மோடியிடம் 10 வருடம் ஆட்சி செய்த அனுபவம் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் என்ன செய்யப் போகிறோம் என்ற உறுதியான திட்டமும் இருக்கிறது.

உலகில் இந்தியாவை 5வது இடத்திலிருந்து 1ஆம் இடத்திற்கு மிக வேகமாக முன்னேற்றுவோம். பாஜக மூன்றாவது முறையாக வரும்போது, இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் வல்லமை பெற்ற நாடாக மாறும். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பொறியியல் வல்லுநர்கள் தங்கள் பாடத்தை தமிழ் மொழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டில் செயற்கை நுண்ணறிவு என்கின்ற புதிய தொழில்நுட்பம் மூலம், உங்கள் மொழியில் தன்மையும், வலிமையும் அதிகரிக்கும்.

மொழிவாரியாக புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். நமது அடுத்த ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய உட்கட்டமைப்பை உருவாக்கும். அது ஏதோ பெரிதாக ரோடு, கட்டடம் கட்டப்போவதாக நினைக்கிறார்கள். ஆனால், அந்த உள்கட்டமைப்பு இந்த நாட்டின் ஒரு ஏழையின் வீட்டிற்குள் வரும். ஒரு வீடு உலகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பெற்றுவிடும். தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் எல்லாம் பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். நான் உங்களைக் கூர்ந்து நோக்குகிறேன். இந்த விவகாரங்களில் எங்கள் உணர்வுகள் மிகத்தெளிவாக உங்கள் மனதுடன் ஒத்துப் போகிறது.

எனவே, உங்களுக்குத் தேவையான நன்மைகளை கண்டிப்பாக செய்வோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய வேகம் கிடைக்கும். இங்கிருக்கும் இளைஞர்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல், இருக்கும் இடத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய திட்டங்கள் மூலம் மிகப்பெரிய பயனடைவார்கள். இதுவும் உங்கள் மோடியின் உத்தரவாதம். 2024 தேர்தலில் ஒரு பக்கம் வளர்ச்சியையும், தொலைநோக்கு பார்வையில் முன்னிறுத்திக் கொண்டு பாஜக ஒரு பக்கம் இருக்கிறது.

இப்போது திமுக - காங்கிரஸ் எதிர்பக்கத்தில் இருக்கிறது. அதனால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்கள் குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் வர நினைக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள், பதிலிருக்காது. ஆனால், அடுத்து யார் முதலமைச்சராகப் போகிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். அப்பாவுக்கு அப்புறம் பிள்ளைக்கு, அப்புறம் அவர்கள் பிள்ளை என வம்சாவளி அரசியலை முன்னிறுத்துகிறார்கள்.

அந்த கட்சித் தலைவர் யார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால், திமுக நாட்டை விட, குடும்பத்தைதான் முக்கியமாக கருதுகிறது. ஒவ்வொரு நாளும் மக்களைப் பிரித்து ஆள வேண்டும். ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்ப வேண்டும். மொழியையோ, சாதியையோ வைத்து சண்டையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம்.

அவர்களின் அந்த எண்ணம் நிறைவேறப் போவதில்லை. 'என் மண் என் மக்கள்' யாத்திரை மூலம், அண்ணாமலை நாட்டை ஒற்றுமைப்படுத்த நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் அவர்கள் எண்ணம் ஈடேறப் போவதில்லை. நாட்டை ஒன்றுபடுத்த வேண்டும் என்று உழைத்த தமிழ் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால், தன் குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டும் முன்னேற வேண்டும் என நினைக்கும் அவர்களின் சுயநலத்தை அடக்கி, பொதுநலத்தை முன்னிறுத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஏழை குடும்பங்களுக்காக, உழைப்பவர்களுக்காக பாஜகதான் என்றும் துணை நிற்கும். இந்த முறை குடும்பம், பிள்ளைகள் என்ற சுயநலத்தோடு வருபவர்களை தமிழ்நாடு கண்டிப்பாக நிராகரிக்கும். நிராகரித்துதான் ஆக வேண்டும். உங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட நான் இருக்கிறேன். நான் உங்கள் முன் நிற்கிறேன். உங்கள் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகமாக இருக்கிறது.

அவ்வப்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுகிறேன். ஆனாலும், முழுமையாக தமிழ் பேச முடியவில்லை. என் பேச்சு உங்களுக்குப் புரியும்படி பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. ஆனாலும், இத்தனை ஆயிரம் பேர் என் முன் இருக்கிறீர்கள். எனது ஒவ்வொரு சொல்லும் புரியாவிட்டாலும், எனது மனதை, உள்ளத்தைப் புரிந்து கொண்டு நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது இரண்டு கையையும் எடுத்து கும்பிட்டு, தலை வணங்குகிறேன். நீங்கள் எனக்கு வாழ்த்து கொடுங்கள், என்னை வாழ்த்துங்கள்" எனப் பேசினார்.

இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜயதாரணி, கூட்டணி கட்சித் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வருமான வரிச்சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி போராட்டம்.. ஈரோட்டில் வெறிச்சோடிய கடைத்தெருக்கள்!

ABOUT THE AUTHOR

...view details