புதுடெல்லி/சென்னை: மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதே போல் சென்னையில் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது தவிர இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகள் நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மகாத்மா காந்தியின் புண்ணிய திதியை முன்னிட்டு அவரது மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க உதவுகின்றன. தவிர, நமது தேசத்துக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தினேன். அவர்களின் சேவைகள், தியாகத்தையும் நினைவு கூர்கின்றேன்,"என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது புகைப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முதலமைைச்சர் மு.கஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க, அமைச்சர்கள், தலைமை செயலக ஊழியர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.