விருதுநகர்: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் போட்டியிடும் நிலையில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டார்.
அதில், தென்மாவட்ட மக்கள் பயன்பெற காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் தொடங்கப்படும், மதுரை, திருமங்கலம் மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்க பாராளுமன்றத்தில் அழுத்தம் தரப்படும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் சாலை, நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்படும், அருப்புக்கோட்டையில் கைத்தறி குழுமம் அமைக்கப்படும், சாய ஆலைகள் பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட 46 தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது, பிரச்சார யுக்தி. காங்கிரஸ் கட்சியினர் பெண்களுக்கு 1 லட்சம் தரும் மகாலட்சுமி திட்ட வாக்குறுதி அட்டையை மக்களிடம் வழங்கி, அவர்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் மற்றும் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு, கையெழுத்து பெறுகிறார்கள். இதன் காரணமாக, தேர்தல் விதிமுறையை மீறிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வாக்குறுதி கொடுக்கலாம், ஆனால் திட்டத்தின் உத்தரவாத அட்டையை வீடு வீடாக விநியோகம் செய்வது முற்றிலும் தேர்தல் விதிமுறை மீறல். 10 ஆண்டுகள் எம்.பி-யாக இருந்த மாணிக்கம் தாகூருக்கு இதுகூட தெரியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பாக 3 இடங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மக்கள் இவர்கள் அளிக்கும் திட்டத்தை நம்பவில்லை. மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய, இந்த ஒரு ஆதாரம் முக்கியமானதாக உள்ளது.
டெல்லி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளோம். அத்தியாவசிய பொருள், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவையால் பாஜக மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. மாநில அரசை பொறுத்தவரை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மிகப் பெரும்பாண்மையான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சொத்துவரி, மின் கட்டணம், பால் கட்டணம், அரிசி விலை உயர்வால் மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். இதனால், மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகி உள்ளது.
திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பல தொகுதிகளுக்குள் உள்ளே செல்ல முடியாத நிலையில் விரட்டி அடிக்கப்படுகின்றனர். வேலை வாய்ப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களின் இந்த கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்" என்றார்.
இதையும் படிங்க:"பாஜகவுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை" - வீரப்பன் மகள் மனம் திறந்த பேட்டி! - Veerappan Daughter In Politics