சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ஆம் வகுப்பிற்கு நாளை (பிப்.12) முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்திட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறது.
அதன் அடிப்படையில், செய்முறைத் தேர்வினை நடத்துவதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி, சென்னை மாவட்டத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முதல் சுற்று பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 2ஆம் சுற்று பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் 2 சுற்றுக்களாக நடைபெறுகிறது.
செய்முறைத் தேர்வினை அரசுத் தேர்வுத்துறை வழங்கி உள்ள வழிகாட்டுதல்படி, எந்த விதமான புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்தப்பட வேண்டும். செய்முறைத் தேர்விற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை https://www.dge.tn.gov.in/ என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் தாமதம் கூடாது. இதனால் பின் விளைவுகள் ஏற்பட்டால், அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவர்.