தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வாக்கு கேட்டு எங்கள் பகுதிக்கு வர வேண்டாம்” - நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு! - Tirunelveli bridge issue

Poster Against DMK MP & MLA: திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில், நெல்லை எம்.பி ஞான திரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tirunelveli
திருநெல்வேலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 6:43 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஞான திரவியமும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக, அதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் அப்துல் வகாப்பும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலவனிகர்புரம் பகுதியில் உள்ள ரயில்வே பாதையை கடக்க, ஒய் வடிவில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை இந்த வழித்தடத்தில் ரயில்வே கேட் மூடி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் வாழும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். திருநெல்வேலி நகர் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லவும், வலது புறமாக திரும்பினால் மேலப்பாளையம் வழியாக அம்பாசமுத்திரம் செல்லவும் பாதை இருக்கும் நிலையில், புதிதாக அமைக்கப்படக்கூடிய மேம்பாலம் ஒய் வடிவில் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை மேம்பாலப் பணிகள் துவங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது முடிவடைந்த நிலையிலும் பாலத்தின் பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளது. அதேசமயம், பாலம் அமைப்பது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒய் வடிவில் இல்லாமல் நேராக பாலம் அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அம்பாசமுத்திரம் செல்வதற்கான சாலை திருப்பத்தில் தடுப்புகள் அமைக்கப்படுவதால், பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாநகர் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பாலம் விவகாரத்தை தொடர்புபடுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், “துரோகம் செய்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே வாக்கு கேட்டு தொகுதிக்குள் நுழையாதீர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன் ஒய் வடிவிலான பாலத்தை இறுதி செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியமும், சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் வாக்கு கேட்டு தங்கள் பகுதிக்கு வர வேண்டாம்” என்ற வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details