தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவெக மாநாட்டை தடை செய்ய போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி! - TVK Maanadu - TVK MAANADU

புஸ்ஸி ஆனந்த் இளைஞர்களுக்குத் தவறாக வழிகாட்டும் வகையில் பேசுவதாகக் கூறி, விஜயின் தவெக மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், விஜய்
தஞ்சையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 1:58 PM IST

தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தவெக மாநாட்டுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இளைஞர்களை தவறாக வழிகாட்டும் வகையில் பேசியுள்ளது பெற்றோர் தரப்பில் கடும் வெறுப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே அவரது பேச்சுக்கு கட்சித் தலைவர் விஜய் பொறுப்பேற்று தமிழக இளைஞர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையெனில் விஜயின் வீட்டினை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிடுவோம் என எச்சரித்து, கும்பகோணம் மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வருகிற 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கட்சியின் முதல் மாநாட்டிற்காக மாநிலம் முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் விஜயின் சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு வர அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி குருமூர்த்தி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும் போது, "இளைஞர்களை தவறாக வழிகாட்டும் வகையில், உங்கள் வேலையை விட்டுவிட்டு தீபாவளி போனஸ் பற்றிக் கூட பார்க்காமல், தலைவரைப் பார்க்க நீங்கள் அனைவரும் கண்டிப்பாக மாநாட்டிற்கு வர வேண்டும்" என்று பேசி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘வி.சாலை எனும் வெற்றிச் சாலை’.. விஜய் முதல் அரசியல் கடிதம்!

இதேபோன்று கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “பெண் ஒருவர் நடிகர் விஜயை நம்பி மன்றம் ஆரம்பித்து தற்போது எனது குடும்பம் நடுத்தெருவில் உள்ளது” என முறையிட்டதாகவும், அதனால் அதிர்ச்சியடைந்த பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நலத்திட்ட உதவிகள் கூட வழங்காமல், அவரை வரவேற்கும் வகையில் அவருக்காக பிரத்யோகமாக கொண்டு வரப்பட்ட பெரிய மலர் மாலைகளை கூட ஏற்காமல், கூட்டத்தில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி குருமூர்த்தி, "தனது தொண்டர்களின் உழைப்பில் பதவி சுகத்திற்காக இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து கேள்விக்குறியாக்க நினைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மேலும், அதன் தலைவர் நடிகர் விஜய் தமிழக இளைஞர்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மாநாட்டிற்கு முன்பாக மன்னிப்பு கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், மாநாடு முடிந்த பிறகு 28ஆம் தேதி திங்கட்கிழமை, சென்னையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டினை முற்றுகையிடுவோம்" எனவும் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து கண்டன போஸ்டர்களையும் கும்பகோணம் மாநகர் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details