சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை (ஜனவரி 14, 2025) அன்று பட்டயக் கணக்காளர் ஃபவுண்டேஷன் படிப்பின், பாடத் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வு அட்டவணை வாயிலாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டறிந்தார். உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) மற்றும் ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினார். தற்போது, பொங்கல் அன்று வரும் ஒரு தேர்வு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜே. சூர்யா, பட்டயக் கணக்காளர் படிப்புக்கானத் தேர்வு தேதிகள் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) எனும் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் இது தீர்மானிக்கப்படுகிறது; நிதி அமைச்சகத்தால் அல்ல என்று சு.வெகடேசனுக்கு பதிலளித்திருந்தார். இதை ஆதரித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுபதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது ஜனவரி 14 அன்று நடைபெறும் தேர்வு மாற்றிவைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தேர்வுகளுக்கான இணை செயலாளர் ஆனந்த் குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ளார். ஐசிஏஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு தேர்வு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது எனவும், பட்டயக் கணக்காளர் இடைநிலை படிப்பின் தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.