கோயம்புத்தூர்: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், '' இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்து இருப்பதால் இங்கு இருக்கக் கூடிய பூங்காவை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த பூங்காவில் இன்றைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கிறது. குறைந்தபட்சம் இங்கு இருக்கக் கூடிய மரத்தில் இருந்து விழுந்து இருக்கக் கூடிய சருகுங்கள், இலைகள் இவற்றையெல்லாம் அகற்றி கொடுக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய மன நிலை கூட இந்த மாநகராட்சிக்கு இல்லாதது ரொம்ப வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கோ கட்சி சார்ந்ததோ அல்ல. இந்த பகுதியைச் சேர்ந்த அத்தனை மக்களுக்கும் பொதுவான நிகழ்ச்சி. இதுபோன்ற தவறுகளை மாநகராட்சி எதிர் காலத்தில் செய்யக் கூடாது என்பது என்னுடைய கருத்து. எந்த ஒரு விஷயத்தை புதிதாகக் கொண்டு வந்தாலும் அதற்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில், காமராஜருடைய கால கட்டத்தில் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கக் கூடிய அத்தனை மாணவர்களுக்கும், இலவச கல்வி கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்க கூடிய தனியார் பள்ளிகளை யார் நடத்துகிறார்கள்? திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் தி.மு.க மட்டும் கிடையாது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி யார்? யார்? பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்? அந்தப் பள்ளிகளில் இந்தி மொழி கற்று கொடுக்கின்றார்களா? இல்லையா ? இந்த விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் எத்தனை மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லாமல் போனது? இன்றைய காலத்தில் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தமிழ்நாட்டு ஏழை குடும்பங்களை வஞ்சிக்கக் கூடிய வகையில் எதற்காக இவர்கள் தனியார் பள்ளிக் கூடங்களை கொண்டு வந்தார்கள்? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.