சென்னை:சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வறிக்கைக்கு பின்னரே பள்ளி திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
சென்னை திருவெற்றியூர் கிராம தெருவில் அமைந்துள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாயு கசிவு ஏற்பட்டதில் 35 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி திறந்து மாணவ மாணவிகள் காலை பள்ளிக்கு வந்த போது மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டு 5 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குனர் முத்து பழனிசாமி சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாயு கசிவு ஏற்பட்ட பள்ளியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றை ஆய்வு செய்யும் மொபைல் பரிசோதனை வாகனம் பள்ளிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து 2 நாட்கள் முழுவதுமாக பள்ளியில் வாகனத்தின் மூலமாக காற்று பரிசோதனை செய்ய உள்ளனர். . வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் சுற்றளவிற்கு உள்ள காற்றை உரிஞ்சி அதில் உள்ள நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் வகையில் தற்போது இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பள்ளியில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பின்னரே பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குனர் முத்து பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்