கோயம்புத்தூர்:திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் மது அருந்தியதில் இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் அவர்கள் கோவையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கள்ளச்சாராயம் எதுவும் அருந்தவில்லை என திருப்பூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் என்பவரை பொள்ளாச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன், வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொள்ளாச்சி ஜெயராமன், “நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தும் அதனை தடுக்காமல் ஏன் விட்டுவிட்டார்கள்? மாவடப்பு என்பது ஆதிவாசி மக்கள் வசிக்கின்ற கிராமம். அங்கிருந்து சாராயம் கொண்டு வந்து குடித்ததன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில் உடல்நிலை தேறிய நான்கு பேரை நாங்கள் பார்த்தோம், ஒருவர் கவலைக்கிடமான நிலமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது போன்று ஒரு வேதனையான சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்த அவர், காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்தார். இப்படி ஒரு சூழல் இருக்கும் பொழுது எப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்குவார்கள் என கேள்வி எழுப்பினார்.
உழைக்கும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் இங்கு அதிகமாக புழங்குவதால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையெல்லாம் தடுத்து நிறுத்தினால்தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க முடியும் என கூறினார்.