சென்னை:மறைந்த நடிகரும், துக்ளக் பத்திரிகையின் நிறுவனருமான சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி நேற்று (84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: துக்ளக் நிறுவனரும், அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சோ அவர்கள் தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உற்ற துணையாக இருந்த அவரது மனைவி சௌந்தரா ராமசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் : துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர் மறைந்த சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வி.கே. சசிகலா : அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மறைந்த சோ ராமசாமியும், அவரது மனைவி சௌந்தரா ராமசாமியும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர்.
ஜெயலலிதா தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை:துக்ளக் இதழின் நிறுவனரும், நாடகத் துறை, திரைத்துறை, அரசியல் என பல துறைகளில் முத்திரை பதித்தவருமான அமரர் சோ ராமசாமி அவர்களின் மனைவியார், திருமதி. சௌந்தரா ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க :நெல்லை தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விவகாரம்: முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - Nellai Corporation Employee died