மயிலாடுதுறை:பணி நிரந்தரம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்வோர் வாணிபக் கழக தற்காலிக பணியாளர்கள், மக்களை தேடி மருத்துவம் ஒப்பந்த பணியாளர்கள், கிராம ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் சென்னையில் இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றனர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு பேருந்து மற்றும் இரண்டு வேன்களில் நேற்று புறப்பட்டனர்.
பணியாளர்களுடன் போலீசார் வாக்குவாதம் செய்த காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu) அவர்களை மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் புறவழிச் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். உரிய அனுமதி பெற்று செல்வதாகவும், ஏன் எங்களை தடுத்து நிறுத்துகிறீர்கள் என பணியாளர்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீசார் அனைவரையும் திரும்பி போகச் சொல்லியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்வதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தெரிவித்தார். "எந்த அடிப்படையில் எங்களை கைது செய்கிறீர்கள், அனுமதி பெற்றுத்தானே நாங்கள் செல்கிறோம் வாழ்வாதார பிரச்னைக்காக போராடச் செல்வதை ஏன் தடுக்கிறீர்கள்" என பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார், "எத்தனை பேர் தண்ணி அடிச்சு இருக்கீங்க, நீங்கள் மது போதையில் இருக்கிறீர்கள், உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்வேன் எனவும், மது போதை சோதனை செய்யும் கருவியை எடுத்துவரச் சொல்லி அனைவரையும் ஊதச் சொல்வேன் உங்களால் செய்ய முடியுமா? " எனவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு பேருந்து ஓட்டுனர் தான் குடித்திருக்கக் கூடாது, நாங்கள் பயணித்தவர்கள் தான் எனவும் பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆனால், மண்டபத்திலோ அடிப்படை வசதி இல்லாததால் கடும் அவதி அடைந்ததாக கூறியுள்ளனர். மேலும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட பணியாளர்களை செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதிக்காமலும், வெளியே வரவிடாமலும் காவல்துறையினர் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் கவுன்சிலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. தரங்கம்பாடியில் பரபரப்பு!