கன்னியாகுமரி: தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, முக்கிய ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல ரவுடிகளை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில், தென்தாமரை குளம் அருகே உள்ள கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்ற செல்வமுருகன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர் மீது மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், ரவுடிகளின் பட்டியலிலும் செல்வம் உள்ளார். இதனால் போலீசார் செல்வத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அஞ்சு கிராமம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புன்னார் குளம் பகுதியில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒருவரை கத்தியால் மிரட்டி ரூ.2 ஆயிரம் பறித்துச் சென்றதாக, பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில், ரவுடி செல்வம் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, செல்வத்தைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, சுசீந்திரம் அடுத்த தேரூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆதம் அலி, உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.