சென்னை:சென்னைகிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் இன்று (நவ 13) காலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் பாலாஜி என்பவர் பணியில் இருந்த நேரத்தில், அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினார்.
இதனைக் கண்ட பொதுமக்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போலீசார், மருத்துவரை கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் கிடந்த மருத்துவரை குத்தியை கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களான தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க :மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: "இளைஞர் மீது உரிய நடவடிக்கை" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.