தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நள்ளிரவில் 16 ரவுடிகள் கைது.. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலீசார் கைது! - chennai crime news list

Chennai Crime News: நள்ளிரவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலீசாரிடம் சிக்கிய ரவுடிகள் முதல், மது போதையில் இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலீல் ஈடுபட்ட காவல் உதவி சிறப்பு ஆய்வாளரின் கைது நடவடிக்கை வரை சென்னையில் நடந்த குற்றச் செய்திகளின் தொகுப்பை காணலாம்.

போதைப்பொருள் விற்பனை செய்ய வந்த இளம் பெண் சிக்கியது வரை
டன் கணக்கிலான போதை பொருட்கள் புதைக்கப்பட்டது முதல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 6:47 PM IST

சென்னை:சென்னை பெருநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில், தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் பான் மசாலா, மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காவல்துறையினருடன் இணைந்து குழுக்கள் அமைத்து, அனைத்து கடைகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், பெருமளவிலான புகையிலை பொருட்கள், பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பிடித்து, அவர்கள் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வரும் நபர்களைக் கண்டறிந்து, அவர்களின் குடோனில் இருந்து டன் கணக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளும், போலீசாரும் பறிமுதல் செய்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்கிய தடை செய்யப்பட்ட 9.6 டன் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளை மாநகராட்சி அலுவலர்கள் உதவியுடன், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் ஆழமாக குழி தோண்டி, அதில் போதைப்பொருட்களை போட்டு புதைத்தனர். அப்போது, உடன் காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

16 ரவுடிகள் நள்ளிரவில் கைது:சென்னை திருமங்கலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அதிக அளவில் ரவுடிகள் கூடியிருப்பதாக பெரவள்ளூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, சுமார் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சுமார் 16 ரவுடிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து கள்ள துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரிக்கையில், அரக்கோணத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒற்றைக்கண் ஜெயபால், பிரசன்னா மற்றும் முகமது அலி ஆகியோருடன் பிற ரவுடிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட ரவுடி முகமது அலி, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பதும், இவர் சமீபத்தில்தான் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 16 நபர்களையும் பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்ட அனைவரும் ஏ+ கேட்டகிரி ரவுடிகள் என்பதும், இவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ரவுடிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்த தம்பி ராஜன் என்ற ரவுடியை சென்னை அசோக் நகரில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பெண்கள் கைது:சென்னை பாரிமுனை அரண்மனைகாரர் தெருவில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த போலீசாரைப் பார்த்து மூன்று ஆண்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து, இரண்டு பெண்களையும் பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி சின்னாவிற்கு, அவர்கள் போதைப் பொருட்களைக் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த இளம் பெண் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இவர்களுக்கு போதை ஊசி, வலி நிவாரணி மாத்திரை, கஞ்சா உள்ளிட்டவற்றை அந்தப் பெண் சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இரண்டு பெண்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தப்பி ஓடிய சின்னா உள்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலியல் சீண்டலீல் ஈடுபட்ட காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் கைது: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிதாசன் என்பவர், சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 58 வயதான இவருக்கு, திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பாரதிதாசன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பெண் ஒருவரிடம் ஆபாசமாக பேசியதோடு, பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மயிலாப்பூர் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், பாரதிதாசன் மது போதையில் சாலையில் இவ்வாறு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூர் துணை ஆனையர் பாரதிதாசன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில், பாரதிதாசன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், பெண்களின் உணர்வுகளுக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவிகளின் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: எஸ்.வி.சேகர் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details