சென்னை: ஆழ்வார்பேட்டை சேவியர் சாலையில் இயங்கி வரும் மூன்று மாடி கட்டடம் கொண்ட தனியர் கேளிக்கை விடுதியில், நேற்றிரவு எதிர்பாராத விதமாக விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த விடுதியில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அபிராமபுரம் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை மேற்கொண்ட மீட்பு பணியில், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுகாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், (304A) கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக, கேளிக்கை விடுதியின் மேலாளர் சதீஷ் உட்பட 12 பேரிடம் அபிராமபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தின் காரணம் குறித்து அறிக்கை வந்தவுடன், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தது மணிப்பூரைச் சேர்ந்த லாலி(22), மேக்ஸ்(21) மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சைக்கிலோன் ராஜ்(45) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், கேளிக்கை விடுதியின் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அதன் அதிர்வு காரணமாக, இந்த விபத்து நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டதற்கும், மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணிகள் காரணம் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது என்பது தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:“கேளிக்கை விடுதி விபத்து மெட்ரோ பணிகளால் அல்ல” - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு!