தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடி வாகன பேரணிக்கு அனுமதி அளித்தது ஏன் - நீதிபதி விளக்கம்! - pm modi road show in cbe

PM Modi road show in Coimbatore: பிரதமர் மோடியின் வாகன பேரணிக்குச் சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்திருந்த நிலையில், நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

pm modi road show in cbe
pm modi road show in cbe

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 8:19 PM IST

சென்னை:மார்ச் 18-ம் தேதி கோவை வரும் பிரதமர் மோடி, கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாகத் தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு வரை திறந்த காரில் நின்றவாறு மக்களைச் சந்திக்கும்`ரோடு ஷோ' நடத்த உள்ளதாகவும், 4 கிலோமீட்டர் தூரத்துக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

பிரதமர் மோடியுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்வதாகக் கோவை மாவட்ட பாஜக அறிவித்திருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு காரணம் கருதி கோவை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி, மார்ச் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிரதமர் மோடி ரோடுஷோ நடத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், 18ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 14 ம் தேதி கடிதம் தான் கொடுத்ததாகவும், 18 மற்றும் 19 ம் தேதி பொதுத்தேர்வு உள்ளதாகவும், கோவை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், சுமார் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையும், காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை எந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என கேள்வி எழுப்பி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், மாலை 5.25 மணிக்கு பிறப்பித்த உத்தரவில், பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன்?:பிரதமர் அலுவலகத்தின் நலத்திட்டங்களைக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மக்களைச் சந்திக்கப் பிரதமர் விரும்புகிறார். அதற்கு இந்த பேரணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சிகளைப் பொறுத்த வரை, குறிப்பாகப் பிரதமர் மற்றும் முதல்வர் போன்றவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை நிச்சயமாக அது பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூற்றை ஏற்படுத்தும்.

இருந்த போதிலும் அதை ஒரு காரணமாகக் கூறி அனுமதி மறுக்க முடியாது. மாறாகப் பொதுமக்களின் சுமூகமான நடமாட்டத்தையும், வாகன போக்குவரத்தையும் உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்தத் தலைவர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால் மக்களைச் சந்திக்கும் அவர்களைத் தடுக்க முடியாது.

வாகன பேரணி மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தேர்வைக் காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமருக்குச் சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சிறப்பு பாதுகாப்புப் படையினர் உறுதி செய்து கொள்வார்கள்.

அவர்களுக்கு மாநில காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர, மத ரீதியாகப் பதட்டமான பகுதி என்ற காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கக் கூடாது. பிரதமரின் பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உரியப் பாதுகாப்புடன் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும்.

அந்த நிபந்தனைகளில் எந்த பகுதியில் பேரணி நடத்தப்படுகிறது, எவ்வளவு தூரம் நடத்தப்படுகிறது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை காவல்துறையினர் விதிக்கலாம். பிரதமரின் பேரணியில் எந்த விதமான பேனர்களும் அமைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கலாம். இந்த நிபந்தனைகளை மனுதாரர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதமரின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல், பேரணி எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெறுவதை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:யார் இந்த ஆர்.சச்சிதானந்தம்? திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இவர் செய்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details