தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா? ரூ.4 லட்சம் மோசடி.. தூத்துக்குடியில் பெண் உட்பட 2 பேர் கைது! - thoothukudi Money fraud issue

Thoothukudi Money fraud issue: தூத்துக்குடியில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவின் பாலகம்
ஆவின் பாலகம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:52 PM IST

தூத்துக்குடி: ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கார், ரூ.30 ஆயிரம் பணம், 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு, ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்கு பதிவுக் கட்டணம், செயலாக்க கட்டணம், ஆவணக் கட்டணம் (Registration Fees, processing fees, Documentation charges) என பல்வேறு காரணங்களைக் கூறி, மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் சைபர் கிரைம் போர்ட்டலில் (National Cyber crime Reporting Portal) புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ்குமார் (44) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்டிமா (29) என்ற பெண் ஆகியோர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் சுரேஷ்குமாரை திருச்சியிலும், கிறிஸ்டிமாவை தூத்துக்குடியிலும் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஒரு கார், ரூ.30 ஆயிரம் பணம், 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி, சுரேஷ்குமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், கிறிஸ்டிமாவை தூத்துக்குடி கொக்கரக்குளம் சிறையிலும் அடைத்தனர்.

மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து சொத்துக்களைக் கைப்பற்றிய சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: வேலை நிறுத்தத்தில் இறங்கிய மயிலாடுதுறை மருத்துவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details