சென்னை:சிட்லபாக்கத்தில் பட்ட பகலில் இருவரை வழிமறித்து போலீஸ் எனக்கூறி ஒரு கும்பல் ரூ. 70 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிட்லம்பாக்கம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
விசாரணையில், 'சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், ஹெரிடேஜ் ஜெயேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹேல் அகமது (29). இவர் சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்ஃபோன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் தாம்பரத்தில் உள்ள வங்கியில் அவரது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.70 லட்சம் பணத்தை கடனாக பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, பணத்தை அவரது கடையில் வேலை செய்யும் ஆகாஷ், பிரவீன் ஆகியோரிடம் கொடுத்து, அவரது வீட்டில் ஒப்படைக்குமாறு கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன்படி, இரண்டு பேரும் நேற்று (பிப்ரவரி 15) மாலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து, ரயில் மூலம் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து குரோம்பேட்டை ராதா நகர், வீரபத்திரன் தெரு வழியாக ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசார் எனக்கூறி, அந்த இரண்டு பேர் கொண்டு வந்த பையை சோதனைச் செய்துள்ளனர்.
இதில், கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக்கண்டு உங்களை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, ராதா நகர் பகுதியில் உள்ள கொல்லஞ்சாவடி அருகே அழைத்துச்சென்று, அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றுள்ளனர். இதில், ஆகாஷ் என்பவரை மேடவாக்கம் சிக்னல் அருகே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பிரவீனோடு சோழிங்கநகர் பகுதியில் சுற்றி விட்டு, மீண்டும் ராதாநகர் அருகே இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.