மயிலாடுதுறை:விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பள்ளிக் கூட தெருவைச் சேர்ந்தவர் மாயவன்(40), பார்வையற்ற இவர் ஊர் ஊராகச் சென்று பாட்டுப்பாடி யாசகம் பெற்று வருகிறார். அந்த வகையில், மாயவன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்துள்ளார்.
மேலும், அவரால் பார்க்க முடியாது என்பதற்காக 11 மற்றும் 12 வயதுடைய அவரது தங்கை மகள்களை, உதவிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதனையடுத்து மாயவன் மணிக்கூண்டு பகுதியில் ஒரு சிறுமியை மட்டும் அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் மாயவனை அழைத்து சாப்பாடு வாங்கித் தருவதாகக் கூறி, அவரை ஒரு கடையின் அருகே அமர வைத்துவிட்டு, உணவு வாங்க செல்லலாம் எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வராத காரணத்தால் அச்சமடைந்த மாயவன், அப்பகுதியிலிருந்த பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அதன் மூலம் சிறுமியைக் கடத்திச் சென்ற நபரைத் தேடி வந்தனர்.