சென்னை:பெங்களூருவைச் சேர்ந்த நித்யா வெங்கட்ராமன் கடந்த 27 ஆம் தேதி நித்யா சென்னை அடையாறு காந்தி நகர் முதல் மெயின் ரோட்டிற்கு காரில் வந்துள்ளார். காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு அருகில் இருந்த அழகு நிலையத்திற்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது காரின் வலது புற கண்ணாடி உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த விலை உயர்ந்த லேப் டாப் திருடப்பட்டு இருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நித்யா, இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 2 பேர் சாதுர்யமாக கார் கண்ணாடியை உடைத்து, லேப் டாப்பை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கார் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை திருடியது திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியபோது போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் மீண்டும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை சென்னையில் காட்ட தொடங்கி இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்தவர்கள் குறித்து தீவிர விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப், உதயகுமார் என்பது தெரியவந்தது. இவர்கள் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் திருச்சி சென்று பிரதீப்பை கைது செய்தனர். உதயகுமார் தப்பி ஓடி விட்டார். கைதான பிரதீப்பை போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.