வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை மசூதி தெருவைச் சேர்ந்தவர் பராஸ் அகமது (29). இவர் ஆம்பூரில் பழைய இரும்பு மற்றும் தோல் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் பலர் இவருடைய கடையில் இருந்து இரும்பு, தோல் பொருட்களை தவணையில் வாங்கி செல்வதும், அதற்கான பணத்தை சில நாட்களில் பராஸ் அகமது நேரில் சென்று வசூலிப்பதும் வழக்கம்.
அதன்படி, கடந்த 7-ம் தேதி இரவு பராஸ் அகமது, வேலூர் பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் கடை வைத்துள்ள சில வியாபாரிகளிடம் கொடுத்த பொருட்களுக்கான பணத்தை வசூலிப்பதற்காக ஆம்பூரில் இருந்து காரில் வந்துள்ளார். பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை வசூல் செய்து அதனை ஒரு பையில் வைத்து கொண்டு பராஸ் அகமது காரை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் திடீரென அவரை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணப் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.