சென்னை:மேற்கு தாம்பரம் அடுத்த மாந்தோப்பு மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். வழக்கறிஞராக உள்ள இவர், இவர் அதே பகுதியில் அடுக்குமாடி வீட்டில், தனது மனைவி பிரியா மற்றும் மகன் விஷால் மற்றும் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.7) இரவு தியாகராஜன் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, அவரது மனைவி பிரியா, மகன் விஷால் மற்றும் அவருடைய தாயார் என மூவரும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் இருந்து உள்ளனர்.
அப்போது, வீட்டின் ஹால் பகுதியில் மாற்றப்பட்டிருந்த கண்ணாடி திடீரென கீழே விழுந்து நொறுங்கி சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. கண்ணாடி உடையும் சத்தம் கேட்டதும், வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், கண்ணாடி உடைந்திருந்ததை வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்துள்ளது.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர், இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் காவல்துறை அதிகாரிகள் இச்சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.