சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 21 ஆம் தேதி திருவண்ணாமலை சந்தைமேடு பகுதில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; '' பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில், டிசம்பர் 21ம் தேதி மாலை 4.00 மணிக்கு தொடங்கும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனரான நான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் பல்வேறு உழவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இணை மற்றும் சார்பு அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
பாசனத் திட்டங்கள் செயல்படுத்தவில்லை: தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை தான்; உழவர்கள் தான் உணவு படைக்கின்றனர் என்றாலும் கூட உழவர்களுக்கும், உழவுத்தொழிலுக்கும் உரிய முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. தமிழ்நாட்டின் சாகுபடி பரப்பு 48 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் குறைந்து விட்ட நிலையில், அதை அதிகரிப்பதற்கான புதிய பாசனத் திட்டங்கள் எதையும் ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை.
இதையும் படிங்க:"விரக்தி, ஏமாற்றம்.. விஷ ஜந்துகளுக்கு நாங்கள் விஷக்காளான்கள் தான்" - எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி!
தமிழக அரசு குரல் கொடுக்கவில்லை:காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி, நம்பியாறு, கருமேணியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் முடங்கிக் கிடக்கின்றன. காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி செயல்படுத்த மத்திய அரசு முன்வரவில்லை; அதற்காக தமிழக அரசும் குரல் கொடுக்கவில்லை.