தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்'.. 26 மணல் குவாரிகளை திறக்க முடிவு? எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ் - delta Sand quarries

Anbumani Ramadoss: தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்கில், காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani Ramadoss Photo
அன்புமணி ராமதாஸ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 3:10 PM IST

தமிழ்நாட்டில் மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவைர் அன்புமணி ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட பல காரணங்களால் மூடப்பட்ட 26 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயற்கை வளங்களையும், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வரும் நிலையில், அந்த நோக்கங்களை சீர்குலைக்கும் வகையில் மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த 48 மணல் குவாரிகள் கடந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்பட்டன. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதைப் பொருட்படுத்தாத தமிழக அரசு, கடந்த ஆண்டு மே மாதத்தில் காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் மொத்தம் 25 மணல் குவாரிகளைத் திறந்தது.

அதன்பின் 3 மாதங்கள் கழித்து 10 மணல் குவாரிகளை திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அதன் பின்னர் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய ஆய்வு, மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அனைத்து மணல் குவாரிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன.

சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட மணல் குவாரிகளில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மணல் குவாரிகளே இருக்கக்கூடாது என்பது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விருப்பம் ஆகும்.

மணல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மணல் குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதித்துள்ளன. ஆனால், தமிழக அரசு சுற்றுச்சூழல் குறித்து எந்த அக்கறையும் கொள்ளாமல் மணல் குவாரிகளை திறந்தாலும் கூட, அமலாக்கத்துறை ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் குவாரிகள் மூடப்பட்டன. அதை இயற்கையாக நடந்த நன்மை என்று கருதி அதே நிலை தொடர தமிழ்நாடு அரசு அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக மூடப்பட்ட குவாரிகளில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கத் துடிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் அக்கறை இல்லை என்பதை அரசு நிரூபித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க எந்த நியாயமும் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் 25 மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட போது, அவற்றிலிருந்து 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டியெடுப்பதற்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த அளவு மணலை வெட்டி எடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே மணல் குவாரிகளை ஆய்வு செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இந்த மணல் குவாரிகளில் 27.70 லட்சம் அலகுகள் மணல் அள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட 4 மடங்கு ஆகும். அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாகவே மணல் அள்ளப்பட்டு விட்ட நிலையில் மூடப்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டவையாகவே இருக்க வேண்டும். அதை மீண்டும் திறக்க அரசு துடிப்பது இயற்கை வளங்களை சிதைக்கும் செயலாகும்.

தமிழக அரசு மீண்டும் திறக்க தீர்மானித்துள்ள 26 மணல் குவாரிகளும் காவிரி பாசன மாவட்டங்களில் தான் அமையவுள்ளது. அவற்றில் 20 மணல் குவாரிகள் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டவை ஆகும். இரு கட்டங்களாக திறக்கப்பட்ட அந்த 20 மணல் குவாரிகளும் கொள்ளிடத்தில் திருச்சி மாவட்டம் மாதவபெருமாள் கோயிலுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிவேளூருக்கும் இடையே 87 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

இவை மீண்டும் திறக்கப்படும் போது கொள்ளிடத்தில் 4 கி.மீ.-க்கு ஒரு குவாரி செயல்படும். கொள்ளிடம் ஆற்றில் 5 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்; அதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்கும், பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத தமிழ்நாடு அரசு, 4 கி.மீ.-க்கு ஒரு மணல் குவாரியை திறக்கிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான்.

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் குவாரிகளை மீண்டும், மீண்டும் திறக்கக்கூடாது. ஆறுகள் எனப்படுபவை இயற்கை அன்னை நமக்கு கொடுத்த கொடை; அவை வரம். அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். மணல் குவாரிகள் என்ற பெயரில் ஆறுகளைச் சுரண்டி வரத்தை சாபமாக்கி விடக் கூடாது. தமிழ்நாடு அரசும் நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம். அதை விடுத்து மீண்டும், மீண்டும் மணல் குவாரிகளை திறப்பது தமிழ்நாட்டை, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தர பாலைவனமாக மாற்றிவிடும்.

தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று கூறி மதுவின் விற்பனையை அதிகரிப்பதும், கட்டுமானப் பணிகளின் நலனுக்காக என்று கூறி மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறப்பதும் மக்கள் நல அரசுக்கு அழகல்ல. தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் மணல் குவாரிகளை திறப்பது தமிழகத்தை பாலைவனமாக்கிவிடும் - ராமதாஸ் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details