சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரியத் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2022ஆம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 8.4.2022 அன்று அன்புமணி ராமதாஸ் தலைமையிலான 7 பேர்கொண்ட குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைக் கடிதத்தைக் கொடுத்து, 2022 -23ஆம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக குழு வலியுறுத்தியது.
அதற்குப் பதிலளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கண்டிப்பாக வன்னியகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேவைப்பட்டால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றச் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவேன் என்று உத்தரவாதம் அளித்தார். அதன்பின் பல முறை சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக வாக்குறுதிகள் அளித்தார். 'மு.க.ஸ்டாலின் அவர்களே அந்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயின?'
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்களுக்குப் பிறகு, 12.01.2023ஆம் நாள் தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆணையம் 3 மாதங்களுக்குள் பரிந்துரை செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்னும் 10 நாட்களில் நிறைவடையவுள்ளது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை. ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்த ஆய்வுகள் எந்த நிலையில் உள்ளன? எப்போது பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை பத்துக்கும் கூடுதலான முறை அணுகி விசாரித்தோம். ஆனால், வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான எந்த தரவும் இதுவரை எங்களுக்கு வரவில்லை என்பது தான் ஆணையத்தின் பதிலாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுக அரசு காட்டும் அக்கறை இந்த அளவுக்குத் தான் உள்ளது.