சென்னை:திருநெல்வேலியில் கந்துவட்டியால் மூதாட்டி செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற மூட்டைத் தூக்கும் தொழிலாளி, அவரது தாயார் சாவித்திரியின் மருத்துவச் செலவுகளுக்காக காளிராஜ் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
120 சதவீத வட்டி: அந்தக் கடனுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம், அதாவது 120 சதவீத வட்டி செலுத்த வேண்டுமென காளிராஜ் கூறியிருக்கிறார். அதை ஏற்று கடன் வாங்கிய கண்ணன், தொடர்ந்து வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த மாதத்திற்கான வட்டியை செலுத்தவில்லை. இதனால் காளிராஜ் சாவித்திரியை மிரட்டியதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
அடித்துக் கொலை: அதனால் ஆத்திரமடைந்த காளிராஜும், அவரது உறவினரும் கடந்த சில நாட்களுக்கு முன் சந்தையில் மூட்டைத் தூக்கிக் கொண்டிருந்த கண்ணனை கொடூரமாக தாக்கியதுடன், கத்தியாலும் குத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முந்திய தினம் சாவித்திரியின் வீட்டிற்கு சென்ற காளிராஜும், அவரது உறவினரும் இரும்புக் கம்பியால் அவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தக் கொடூரக் கொலையைத் தடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கந்துவட்டிக் கொடுமைகளை தாமாக முன்வந்து தடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் காவல்துறையின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை. 120% கந்துவட்டி செலுத்தாதற்காக சாவித்திரியை காளிராஜும் அவரது உறவினரும் வீடு தேடி வந்து மிரட்டிய நிலையில், அது தொடர்பாக சாவித்திரி அளித்த புகாரின் அடிப்படையில் காளிராஜும், அவரைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருந்தால் சாவித்திரி அடித்துக் கொலை செய்யப்படுவதை தடுத்திருக்கலாம்.
கொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பு:அதன்பின் 3 நாட்களுக்கு முன் நயினார்குளம் சந்தையில் கண்ணனை கத்தியால் குத்திய பிறகாவது காளிராஜ் மற்றும் அவரது உறவினரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததால் தான் சாவித்திரி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அதிகரித்து வரும் கந்துவட்டி தற்கொலைகள்: தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமைகளை தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்ப்பதற்கும், கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும் கொடூரமான எடுத்துக்காட்டு தான் மூதாட்டி சாவித்திரியின் படுகொலை. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே கந்துவட்டிக் கொடுமைகளும், அதனால் நிகழும் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களில் மட்டும் சிவகாசி, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 1200-க்கும் மேற்பட்டோர் கந்துவட்டியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் கூட கந்துவட்டிக் கொடுமைகளைத் தடுக்க தமிழகத்தின் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.