தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தனர்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “காவிரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணை மூலமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நீரில் 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் கடலில் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி ஒரு வினாடி என்றால், ஒரு நாளைக்கு 15 டிஎம்சி நீர் ஆகும்.
கர்நாடகா காவிரிக்கு கொடுக்க வேண்டியது 177 டிஎம்சி. ஆனால், கடலில் சென்று கொண்டிருப்பது 17 டிஎம்சி. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஓர் ஆண்டுக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 15 டிஎம்சி. சென்னைக்கு ஓராண்டுக்குத் தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்குகிறது தமிழக அரசு. முதலமைச்சர் காவிரியில் வருகின்ற நீரைப் பயன்படுத்தி கடலில் கலக்கும் இந்த நீரை பல திட்டங்கள் மூலம் வகுக்க வேண்டும்.
காவிரியில் தடுப்பணைகள்: காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழ்நாட்டிற்கு உயிர்நாடி ஆறு, 7 கோடி மக்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அதில் 5 கோடி மக்கள் காவிரியை நம்பி இருக்கின்றார்கள். ஆனால், காவிரியில் வருகின்ற நீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. ஊழல், கொலை, கொள்ளை தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம், கஞ்சா, போதைப் பொருட்கள் அதிகமாகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை.
சாதிவாதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்:முதலமைச்சர் சாதிவாதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். நீதிமன்றம் இரண்டு முறை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தச் சொல்லியும் அரசியல் ரீதியாக நடத்த மறுக்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. சமூக நீதி என்று அக்கறை இருந்தால் கண்டிப்பாக நடத்தி இருப்பார்கள்.