தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நாங்கள் இருப்பதையே நிதியமைச்சர் மறந்துவிட்டார்”.. மத்திய பட்ஜெட் குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுவது என்ன? - Disabled person protest

Disabled person protest: மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் போராட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 7:30 PM IST

சென்னை: 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 23ஆம் தேதி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் 0.02 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் எஸ்.மனோன்மணி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், இன்று (ஜூலை 26) சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், மத்திய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை நகலை கிழித்தும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து மத்திய சென்னை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் செயலாளர் எஸ்.மனோன்மணி ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த பேட்டியில், “பாஜக அரசு கடந்த 2 முறை ஆட்சியில் இருந்த போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டார்.

அத்தியாவசிய பொருட்களுக்கு வரிகளை உயர்த்திவிட்டு, அத்தியாவசியமில்லாத பொருட்களுக்கான வரிகளை குறைத்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியில் சலுகைகள் கொடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக தொழில் துவங்குவதற்கு வங்கியில் கடன் வாங்குவது சிரமமாக உள்ளது. AAY கார்டு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மானியம் வழங்குவதற்கு திட்டம் உள்ளது. ஆனால், இந்த திட்டத்தை அமல்படுத்தவே இல்லை. மேலும், மாற்றுத்திறனாளிகள் நாடு முழுவதும் பயணிப்பதற்கு UDID (தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை) திட்டமும் உள்ளது. ஒரு மாற்றுத்திறனாளி ரயிலில் பயணிக்கிறார் என்றால், அவர் ஒன்பது ஐடி கார்டுகள் எடுத்துச் செல்ல வேண்டும். இத்தனை சிரமங்களை மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கின்றனர்" இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பேசிய மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி விஜய், “மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை உயர்த்தி தரவில்லை. வேலை வாய்ப்புகளில் முக்கியத்துவம் இல்லை. நேரடி வேலை வாய்ப்புகள் எங்களுக்கு வழங்க வேண்டும். UDID கார்டு பல மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவில்லை. மேலும், உணவு மானியங்கள் கிடைப்பதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் சரியான முறையில் கிடைப்பதில்லை. எனவே, எங்களுக்கு தனி வாகனம் எளிதில் கிடைக்குமாறு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஜெயிலுக்கு போகனும்.. அதனால பெட்ரோல் குண்டு வீசுனேன்.. சென்னையில் பரபரப்பு! - PETROL BOMB Attack in Chennai

ABOUT THE AUTHOR

...view details