மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமைலாடி ஊராட்சியில் உள்ளது மாங்கணாம்பட்டு கிராமம். நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்தே காணாமல் போவதைப் போன்று, தங்கள் கிராமத்தில் 100 குடியிருப்புகளுக்கு உரிய பட்டா அரசு ஆவணத்தில் இருந்தே தொலைந்து போனதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கிராம மக்கள் அளித்த புகார் மனுவில், சீர்காழி அடுத்த மாங்கணாம்பட்டு உட்கிராமத்தில் உள்ள புல எண் 262 சி மற்றும் 262 பி ஆகியவற்றில் 100 குடும்பங்கள் மூதாதையர் காலத்தில் இருந்தே வசித்து வருவதாகவும், அந்த இடங்களுக்கான பத்திரங்கள் அனைவரிடமும் உள்ளன. ஆனால் பட்டா இல்லை.
சீர்காழி வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு விண்ணப்பித்த போது, அப்புல எண்களுக்குரிய நில வரைபடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லை என தெரிவித்தாகவும், இந்த புல எண்களுக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் அடங்கலும் இல்லாததால், இங்கு குடியிருப்பவர்களுக்கு பட்டா கொடுக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறியதாக குறிப்பிட்டு உள்ளனர்.