சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு பெரியார் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெரியார் கூறியதாக ஆதாரமற்ற பொய் செய்திகளை சீமான் பரப்பி வருவதாக கூறி, இதற்கு அவரிடம் ஆதாரம் கேட்கப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஜன.9) காலை சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுமார் 10 போலீசார் அங்கு காலை முதலே பாதுகாப்பில் அமர்த்தபட்டனர். இந்த நிலையில், இருபதுக்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோஷமிட்டபடியே சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் (credit - ETV Bharat Tamil Nadu) கார் கண்ணாடி உடைப்பு
சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடியே வீட்டை முற்றுகையிட சென்றதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக சீமான் வீட்டை முற்றுகையிட போவதாக வந்த தகவலால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் சீமான் வீட்டிற்கு முன்பு குவிந்திருந்தனர். அப்போது சீமான் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
'சங்கிகள் செய்து வந்த பிரச்சாரம்'
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ''பெரியாருக்கு பெரியார் என பெயர் சூட்டிய பெண்களை இழிவு படுத்தி சீமான் பேசியுள்ளார். பெரியார் குறித்து சீமான் கூறிய இழிவு தனமான பேச்சு ஆதாரமற்றவை. பெரியார் கூறியதாக சீமானிடம் ஆதாரம் இருந்தால் அதனை அவர் தர வேண்டும். பெண்களுக்காக போராடிய பெரியாரைப் பற்றி அவதூறாக பேசுவது கடந்த காலங்களில் சங்கிகள் செய்து வந்த பிரச்சாரம். அதனை தற்போது சீமான் பேசி தமிழ்நாட்டு மக்களிடம் சிக்கியுள்ளார். சீமான் பேசிய சர்ச்சை கருத்தை அவர் திரும்ப பெறாவிட்டால் போராட்டாம் தொடரும்'' என தெரிவித்தார்.