மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் சார்பில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தின் 2ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நேற்று (பிப்.3) தொடங்கியது. இந்த புத்தகக் கண்காட்சி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், புத்தகத் திருவிழாவின் 2ஆம் நாளான இன்று (பிப்.4) மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு "படிப்போம், படைப்போம்" என்கிற தலைப்பில் மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்த புத்தகத் திருவிழாவில் கம்பர், மூவலூர் ராமாமிர்தம், மாயவரம் வேதநாயகம், கல்கி உள்ளிட்ட மயிலாடுதுறை மண்ணில் பிறந்த இலக்கிய அறிஞர்கள் பலரின் புகழ் பெற்ற புத்தகங்களுக்காக பிரத்யேகமாக தனி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கவர்ந்தது.
அந்த வகையில், கல்கியின் "பொன்னியின் செல்வன்", சாண்டில்யணின் "கடல் புறா" போன்ற பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், பழங்கால இந்தியா முதல் தற்கால இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றை விளக்கும் எண்ணற்ற புத்தகங்கள் என வாசகர்களைக் கவரும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.