திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர், மத்திய மாநில அரசின் உதவியுடன் அறக்கட்டளை துவங்கி நடத்தி வருவதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், தனது அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்ந்தால், ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு லட்சத்துக்கு ஒரு கோடி ரூபாய் திருப்பி தரப்படும் என உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இது எப்படி சாத்தியம் என பொதுமக்கள் கேட்டபோது, தமிழகத்தில் நூறு வருடங்களுக்கு மேல் பழமையான கோயில்களின் கோபுரத்தில் உள்ள கலசத்தில் உள்ள இரிடியம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை ரிசர்வ் வங்கி மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்து, பல லட்சம், கோடிக்கணக்கிலும் பணம் தருவதாக கூறியுள்ளார்.
மேலும், தனது அறக்கட்டளையில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து, அதன் பின்னர் ஒரு லட்சம் ரூபாய் தருபவர்களுக்கு, ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் திரும்ப தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரது கூற்றை மொட்டணம்பட்டி, பாடியூர், கொசவபட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உண்மை என நம்பியுள்ளனர்.
பின்னர், தங்களது வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், விற்பனை செய்தும், தங்களின் சேமிப்பு பணம் என பெருமாளிடம் கொடுத்துள்ளனர். அதற்கு பெருமாள் குடும்பச் செலவிற்காக தங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறி புரோ நோட் எழுதிக் கொடுத்துள்ளார்.
மேலும், உங்களது வங்கிக் கணக்கில் ஒரு மாதத்திற்குப் பின் பணம் வரவு வைக்கப்படும் என கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளார். பணத்தைப் பெற்று பல வருடங்கள் ஆகியும் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை என்பது குறித்து பெருமாளிடம் மக்கள் கேட்டுள்ளனர். அதற்கு பிரதமர் மோடி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் என பலருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாவும், விரைவில் அரவர்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பின்னர், ரிசர்வ் வங்கியின் போலியான ஆவணத்தைக் காட்டி, தனது பெயருக்கு பணம் வந்து விட்டதாகவும், ஆடிட்டிங் பணிகள் முடிந்தவுடன் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பொய்க்கு மேல் பொய் கூறியுள்ளார். இதனிடைய, பணம் குறித்து விசாரிக்கச் செல்லும் மக்களை ஆட்களை வைத்து மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த கிராம மக்களிடம் கோடிக்கணக்கான தொகை மோசடி செய்தவர் குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்துள்ளனர்.
ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இல்லாததை அடுத்து புகார் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள கிராம மக்களிடம் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெயரைச் சொல்லி பெருமாள் என்பவர் மோசடி செய்து வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. யானை தந்தம் கடத்தல் கும்பலை பிடித்த வனத்துறையினர்!