திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள தனலட்சுமி என்ற மில் ஒன்று உள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த இந்த மில் தற்போது மூடப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இந்த நிலையில், பூட்டிக் கிடக்கும் இந்த மில் வளாகத்தில் ஏராளமான மரம், செடி, கொடி என வளர்ந்து புதர்க்காடாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, உள்ளே இருக்கும் கட்டடங்களும் பாழடைந்து பயமூட்டும் வகையில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
திருப்பூரின் மத்தியில் உள்ள போதும், இந்த மில் வளாகம் மட்டும் ஒரு காட்டுப்பகுதியைப் போலவே காட்சியளிக்கிறது. அதனால், அங்குள்ள மரங்களில் ஏராளமான வௌவால்கள் கூடுகட்டி கூட்டம் கூட்டமாக வசிக்கின்றனர். இந்த வௌவால்கள் பகல் முழுவதும் அங்குள்ள கட்டடங்களிலும், மரங்களிலும் அமைதியாகத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இரவாகத் தொடங்கிய பின்னர்தான் இந்த ராட்சத வௌவால்களின் ஆட்டம் துவங்குகிறது. அந்திசாயும் பொழுதே பெருங்கூச்சலுடன் கூட்டம் கூட்டமாக படையெடுயத்து கிளம்பும் வௌவால்கள் கொங்கு மெயின்ரோடு, புதுராமகிருஷ்ணாபுரம், கே.பி.என்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் படையெடுத்துவிடுகின்றன.