ரூ.22,000 வரை உயர்ந்த விமான டிக்கெட்.. ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா விரையும் மக்கள்! - Airfare has increased - AIRFARE HAS INCREASED
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநில மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் விமான கட்டணமும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
விமானம், ஓணம் பண்டிகை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
சென்னை: கேரள மாநிலத்தில் பாரம்பரிய பண்டிகை மற்றும் முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இதை மலையாளிகள் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். 10 நாட்களுக்கு இப்பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் கேரள மாநில மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.
இதன் காரணமாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
இடங்கள்
வழக்கமான கட்டணம்
இன்றைய கட்டணம்
சென்னை - திருவனந்தபுரம்
ரூ.3,404
ரூ.11,928 -13,855 வரை
சென்னை - கொச்சி
ரூ.3,275
ரூ.6,567 - 8,842 வரை
சென்னை- கோழிக்கோடு
ரூ.3,851
ரூ.10,913 - 21,740 வரை
விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையிலும், சொந்த ஊரில் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கேரள மக்கள் அதிக கட்டணங்களை செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், சென்னையில் இருந்து கேரளாவுக்கு நேரடி விமானங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பெங்களூரு, ஹைதராபாத் வழியாக கேரள மாநிலம் செல்லும் விமானங்களிலும் பயணிக்கின்றனர்.