மதுரை: தீபாவளியை முன்னிட்டு கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி, பழனி, வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்படும் சிறப்பு மெமு ரயில் சேவையை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று மதுரை சுற்று வட்டார பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலக்காட்டிலிருந்து கோயமுத்தூர் வரை இயக்கப்பட்டு வந்த மெமு ரயிலானது கோவை ரயில் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் வீணாக நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த மெமு ரயிலானது தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழனி வழியாக திண்டுக்கல் வரை இயக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மெமு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால், பொதுமக்கள் இந்த ரயிலைத் தொடர்ந்து இயக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை இயக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால், கோவை - திண்டுக்கல் மெமு ரயிலை மதுரை வரை இயக்குமாறு ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாம்பன் புதிய பாலத்தில் 80 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த ரயில்! - போக்குவரத்து தொடக்கம் எப்போது?
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "மெமு ரயில் சேவைக்காக தவமிருக்கும் மதுரை மக்களுக்கு இந்த ரயில் நல்வாய்ப்பாக அமையும். கோவை - திண்டுக்கல் ரயிலை மதுரை வரை இயக்கினால் மதுரையிலிருந்து பழனி, பொள்ளாச்சி, கோவை செல்வதற்கு மேலும் ஒரு ரயில் மதுரை மக்களுக்கு கிடைக்கும். அதேபோல், கோவை, பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சுற்று வட்டார மக்கள் மதுரைக்கு வருவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
மதுரை - கோவை காலை இன்டர்சிட்டி ரயில் போல கோவை - மதுரை காலை நேர இன்டர்சிட்டி போல இந்த ரயில் இயங்கும். ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் பழனி, ஆனைமலை, மாசாணியம்மன் கோயில் மற்றும் மலை சுற்றுலாத் தலமான வால்பாறை செல்வதற்கும் ஒரு இணைப்பு ரயில் கிடைக்கும். இந்த ரயிலை இயக்குவதால் ரயில்வேக்கு மேலும் வருமானம் அதிகமாகும். மெமு ரயில் என்பதால் கோவை - மதுரை இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும்.
12 பெட்டிகள் மட்டும் இருந்தாலும் 1,500 பயணிகள் வரை இந்த ரயிலில் பயணிக்க முடியும். ஏற்கனவே தீபாவளி விடுமுறையை கருத்தில் கொண்டு இயக்கப்பட்ட மதுரை - சென்னை மெமு ரயில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே கோவை - திண்டுக்கல் மெமு ரயிலை மதுரை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்