சென்னை:சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று (பிப்.13) இரவு 7 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 159 பயணிகள் அமர்ந்திருந்த நிலையில், விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.
இதை அடுத்து, விமானி விமானத்தை ஓடு பாதையில் இயக்குவதற்குத் தயாரானார். அந்த நேரத்தில், திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறந்தால் ஒலிக்கக்கூடிய அலாரம் விமானத்துக்குள் ஒலித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை இயக்காமல் நிறுத்தி விட்டு, அவசரகால கதவை திறந்தது யார் என்று விசாரிக்கத் தொடங்கி உள்ளர். இதை அடுத்து, பரபரப்படைந்த விமான பணிப்பெண்கள் அவசர கால கதவு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பயணியிடம் சென்று விசாரித்து உள்ளானர்.
அப்போது அந்தப் பயணி, “நான் கதவை திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பட்டனை அழுத்தவில்லை. அந்த பட்டன் வித்தியாசமாக இருந்ததால், அதை தெரியாமல் நான் அழுத்தி விட்டேன். உடனே விமானத்துக்குள் அந்த அலாரம் ஒலித்து விட்டது. நான் முதல் முறையாக விமானத்தில் பயணம் மேற்கொள்வதால், எனக்கு அது அவசரகால கதவை திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது” என கூறியுள்ளார்.
ஆனாலும், விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அந்தப் பயணியை உடனடியாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி, காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை விமான நிலைய மேலாளருக்கு தலைமை விமானி அவசர தகவல் கொடுத்துள்ளார். இதை அடுத்து, விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து, அந்தப் பயணியிடம் விசாரனை நடத்தி உள்ளனர்.