தேனி:தேனி மாவட்டம் அருகே கோட்டூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் கடந்த சில வருடங்களாக ஆசிரியையாக ஞான ரூபி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆசிரியை மாணவர்களிடம் தனி அக்கறையும், கல்வி கற்றுக் கொடுக்கும் முறையும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த ஆசிரியை ஞான ரூபி, வருகை பதிவேட்டில் கையொப்பமிட சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் கிரேசி மேரி என்பவர் ஆசிரியரிடம் தங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு விட்டதாகவும், தங்களது மாணவர்களை வேறு வகுப்பறைக்கு இடம் மாற்றம் செய்துள்ளதாக கூறி வருகை பதிவேட்டில் கையொப்பம் இடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மதுரையில் தடம் புரண்ட சென்னை - போடி விரைவு ரயில்..! தீபாவளி நாளில் பரபரப்பு..!
முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் திடீரென ஆசிரியை ஞான ரூபியை இடமாற்றம் செய்ததால், அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அறிந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும், முன்னாள் மாணவர்களும் நன்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியையை இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகத்தினருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்வதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், '' பள்ளியில் ஆசிரியை நன்கு கல்வி கற்றுக் கொடுப்பதாகவும், பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியைக்கும் உள்ள சமுதாய உட்பிரிவு காரணமாக, ஆசிரியரை இடமாற்றம் செய்வதாகவும் கூறினர் . மேலும், அரசு உதவி பெறும் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
பள்ளியில் இருந்து ஆசிரியையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் முற்றுகை போராட்டம் நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்