தஞ்சாவூர்: வீடு கட்ட மின் இணைப்பு பெற சான்றிதழ் கேட்டு வந்தவரிடம் ரூ. 1,250 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்ததுடன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அலுவலக வளாகத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில், தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் பிலிப்ராஜ். இவர் தனது மகளுக்கு கடகடப்பை ஊராட்சியில் உள்ள மல்லிகா நகரில் புதிய வீடு கட்ட திட்டமிட்டு, மின் இணைப்பு பெற சான்றிதழ் கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கடகடப்பை ஊராட்சி செயலர் அந்தோணிசாமி (56) என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, ஊராட்சி செயலர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ.1,250 பணத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வந்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பிலிப்ராஜ், இது குறித்து தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவில் புகாா் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.வி. நந்தகோபால், ஆய்வாளா்கள் பி. பத்மாவதி, அருண் பிரசாத் உள்ளிட்டோா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர்.