மாமன்னன் பட பாணியில் கொடுமை (ETV Bharat) புதுக்கோட்டை: திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மணிமுத்து. இவர் கடந்த 50 வருடங்களாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்ததால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டு, கட்டிடம் கட்டுமான பணிக்கு செல்லும் போது புதுக்கோட்டை மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர் தென்னலூர் பழனியப்பன் உள்ளிட்ட சிலர் கட்டுமான பணியை தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமான பணியை ஏன் தடுக்கிறீர்கள் என்று மணிமுத்து கேட்ட போது, "நீ பொதுத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று விட்டால் எங்களுக்கு நீ பெரிய ஆளா, எங்கள் வீட்டிற்கு அருகாமையில் நீ எல்லாம் தலைவர்னு சொல்லிக்கிட்டு நாற்காலி போட்டு உட்கார என்னடா தகுதி இருக்கு" என்று கூறி அந்த இடத்தில் கட்டிடம் கட்டுமான பணியை ஒரு மாதமாக தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த திருநல்லூர் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி ஏற்கனவே இருந்த இடத்தில் தான் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு புகார் மனு அளித்துள்ளனர். இதையடுத்து கடந்த 5ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்துவை, பழனியப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளாலும், சாதியை சொல்லி திட்டி உள்ளனர்.
மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும், வேறு இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மணிமுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இன்று புகார் மனு அளிக்க வந்தார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதி கேட்டு, மனு அளிக்க காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் மனுவை பெறாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து கோரிக்கை விடுத்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அம்பேத்கர் மக்கள் இயக்க நிறுவன தலைவர் இளமுருகு முத்து, திருநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட விவகாரத்தில், கடந்த 5ஆம் தேதி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் அங்குள்ள பெண்களை புதுக்கோட்டை மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர் தென்னலூர் பழனியப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளாலும், சாதியை சொல்லி திட்டி உள்ளனர்.
இதுகுறித்து இலுப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தோம். மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர் சந்திக்காமல் சென்று விட்டார். பட்டியல் சமூக மக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் அளவிற்கு புதுக்கோட்டையில் வன்கொடுமைகள், வன்முறைகள் நடைபெற்று வருகிறது.16 மாதங்கள் ஆகியும் வேங்கைவயல் பொதுமக்களுக்கு இன்னும் சமூக நீதி கிடைக்கவில்லை.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை அருகே குடிநீர் தொட்டியில் சாணம் கலந்து விவகாரம் நீர்த்துப் போய்விட்டது. இந்நிலையில் மேலும் புதுக்கோட்டையில் வன்கொடுமைகள், வன்முறைகள் நடக்கின்றன. சமூகநீதி கிடைக்கப் பெறவில்லை என்று இருக்கும் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி பெற்றும், மாவட்ட ஆட்சியர் தவிர்ப்பது என்னவென்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். திருநல்லூர் சம்பவம் நடந்து 8 நாட்கள் ஆகியும் இதுவரை எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யவில்லை.
இதை அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்றார். எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அதுவரை இந்த குற்றங்கள் குறையாது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெகதாப்பட்டினம் புதிய மீன்பிடித் துறைமுகம்; திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு! - JAGADAPATTINAM NEW PORT