கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போதைப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக, மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் தலைமையில், தனித்தனியே இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கொரியர் மூலமாக அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கையில் தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா போஸ்ட்-ல் போதைப் பொருட்கள் வந்தது தொடர்பாக அஞ்சல் துறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதற்கு அஞ்சல் துறையின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாநகர காவல் (தெற்கு) துணை ஆணையர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படையினர், போதை மாத்திரைகள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கர்நாடகாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்தவர்களை கைது செய்த பிறகு, கர்நாடகாவில் இருந்து போதை மாத்திரை வருவது நிறுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :கொய்யாப்பழ ஜூஸை கூடுதல் விலைக்கு விற்ற சூப்பர் மார்க்கெட்.. நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
அதைத் தொடர்ந்து, ஹரியானாவில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும், கேரள மாநிலம் மன்னார்காடு, பாலக்காடு பகுதிகளில் இருந்து போலி மருந்து சீட்டு மூலமாக மாத்திரைகள் வாங்கி வந்து கோயம்புத்தூரில் விற்பனை செய்ததில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.