சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அதில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.எச்.மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் 2019 முதல் அதிமுக தொடர்ந்து தோல்வி சந்தித்து வரும் நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகவில் சில தினங்களாக ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி, அதிமுக மீண்டும் இணைய வேண்டும் என்ற கருத்தை யாரும் சொல்லக்கூடாது என கூறியே ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை யாரெல்லாமோ வகித்து வருகிறார்கள். இந்த நிலையில், எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. அதாவது, ஜெயலலிதாவின் பெயரைத் தூக்கி எறிந்த நயவஞ்சகங்களுக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளது.