கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் சேவையை கடந்த 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் ரத்து செய்தது. ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் மீண்டும் 22ஆம் தேதி மலை ரயில் சேவை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி பெய்த மழை காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் பாதையில் அடர்லி ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக மலை ரயில் சேவை 23ஆம் தேதி மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் குன்னூர் மலை ரயில் இருப்புப் பாதை பொறியாளர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று மாலை முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையம், ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் இன்று (மே 24) தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7:30 மணிக்கு புறப்பட்டுச் சென்ற மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்; தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - SOUTHERN RAILWAY