மதுரை: மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு, மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
தனித்துவமான மணம், தன்மை காரணமாக மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியாவிற்கும் மதுரை மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மதுரைக்கு வருகை தருகின்ற பல்வேறு வெளிநாட்டவர்களும், மதுரை மல்லிகையை விரும்பி சூடிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு கிலோ மல்லிகை ரூ.700க்கும், அதிகபட்சமாக ரூ.800க்கும் விற்பனையாகி வந்த நிலையில் இன்று திடீரென ஒரு கிலோ ரூ.1,500க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.